Monday, June 26, 2006

கவிஞன் வீட்டுக்கூரைகூட கவிபாடும்..

அந்த மழை தந்த குளிரில் மனையாளை
கட்டியணத்து கற்பனை கடலில் மூழ்கி
"அந்த நிலவில் போய் மாடமாளிகை கட்டி
என் தங்கத்தை பஞ்ஞணையில் சாய்த்து"
முடிப்பதற்குள் என்வாய் மூடி தன்வாய் மலர்ந்தாள்
"அந்த மாடமாளிகையில் கூரைகள் ஏதுமில்லாது
வானத்தையே கூரயாக்கிடுவார் என் அத்தான்"
அருமை,அருமை நாம் கொண்ட காதல் மழையில்
என் மனையாள் கூட கவிஞையாகிவிட்டாள்
என்றெண்ணி முகம் நிமிர்ந்து பார்க்கயில்
பெரியதொரு மழைத்துளி தங்குதடையேதுமின்றி
கூரை வழியே என்நெத்திப்பொட்டில் பட்டுத்தெறித்தது

Thursday, May 11, 2006

"அம்மா"



மெழுகுவர்த்திபோல் உனக்காக உருகுமோர் சீவன்
சடமான பின்னும் உயிர்கொடுக்க துடிக்குமோர் உறவு
தன் குருதியை உணவாக்கி ஊட்டுமோர் உத்தமி
உன் நிழலுக்கு உருவம் கொடுக்குமோர் உடல்
உனக்கேயுனக்காய் மட்டும் பூவுலகில் வாழுமோர் உயிர்
தமிழகராதியின் அன்பிற்க்கு பொருளாகிய "அம்மா"

என் வலிதான் பெரிது

உலகம் சொல்கிறது பிரசவ வலி பெரிதென்று
மருத்துவம் சொல்கிறது பெண்ணின் மறுபிறப்பென்று
"தாயே" நான் சொல்லுகின்றேன் இவ்வுலகில்
அதை விட பெரியதோர் வலியொன்றுண்டு
நான் பிறக்கும் போது நீ கொண்ட வலியை
நான் பன்மடங்காகவன்றோ உணர்கின்றேன்
நமக்குள் பிரிவு எனும் பதம் வரும்போது......

Tuesday, April 11, 2006

நானறியலையே

கால் கடுக்க காததூரம் நீ கல்லூரிக்குப் போகையிலே
என்னையும் நிழலாக்கிவிட்ட கள்ளியே
ஏனே அப்போது வரை நானறியலையே
"செருப்பு" உன் காலுக்கு மட்டுமல்ல
என் கன்னத்துக்கும் தானெண்டு

நீ அடிக்கடி திரும்பிப் பார்க்கையலெ
என் முடியை கதானாயகனாட்டம் கோதிவிடுகையிலே
ஏனோ அப்போது வரை நானறியலையே
உன் அண்ணன் தான் என் வில்லனெண்டு

ஆவணி மாசத்து என் தோழனின் மணப்பந்தலிலே
மணப்பெண்ணாக நீ வீற்றிருக்கையிலே
ஏனோ அப்போது வரை நானறியலையே
மாலையிட்ட அவன்தானுந்தன் மச்சானெண்டு.

Tuesday, March 28, 2006

என்னமோ நடக்குது.. மர்மாய் இருக்குது..

பார்த்து என்னமோ பத்து நாள்தான்
அந்த பக்கத்து வீட்டுப் பைங்கிளியை
கஞ்சப்பயலொருவன் செய்த குறுக்கிலுமாய்
வள்ளல்பயலொருவன் செய்த நெஞ்சிலுமாய்
இருந்தென்னை காற்றுப்போன பந்தாக்கிவிட்டாள்

இந்நேரம் அவள் பள்ளியெழுவாளே, பல்துலக்குவாளே,
குளிக்கப்போறாளே இப்போ "சோப்பு"போடுவாளோ
ச்சீ ச்சீ வெட்கத்தை விட்டுச்சொன்னால் தானென்ன
இப்போதெல்லாம் என்மனம் குப்பைக்கூடைகள்தாம்

அவள் தந்தை தாய் அறியுமோ ?
ஆனாலும் யாமறியும் அவள்
என்னெல்லாம் படிக்கிறாள் எங்குகெல்லாம்படிக்கிறாள்
எப்படி யெல்லாம் படிக்கிறாளெண்டு

எனக்கு இப்போது என்
நண்பர்களெல்லாம் எதிரிகளாய்,வானரக்கூட்டங்களாய்
அவள் பத்துவயதுதம்பி மட்டும் ஆருயிர்தோழனாய்

அம்மாகூட மெய்சிலிர்த்துதான் போனாள்
"என் பையனுக்கு பொறுப்பு வந்திட்டுது"
காவாலிகளோடு சேர்ந்து ஊரச்சுத்தாம
வீட்டோட இருக்கிறானேயென்று

மனுசனாடா நீ? நேத்து வந்தவளுக்காக நம்மளையெல்லாம்...
முன்னால் நண்பன் திட்டுவதுககூட விளங்கவில்லை
நான்தான் சுவத்தில் காதைவைத்து அவள் தன்னடுப்படியில்
முணுமுணுக்கும் பாட்டை இரசித்துக்கொண்டு இருக்கின்றேனே.

Tuesday, February 28, 2006

ஈழத்தமிழன் காதல்கொண்டால்..


உன் கடைக்கண் பட்டால்
என்நெஞ்சில் ஆயிரம் "ஆட்லறி" வெடிக்கிறதே
அதுவே உன் தேப்பன் பார்த்திட்டால்
"ஜெஜசுக்குறு" ஒன்று நடக்கிறதே
நீ என்னை திட்டும் ஒவ்வொரு சொல்கூட
"A.K.47"தோட்டாக்கள் போலதான் துளையிடுதே
"கிபிர்"போல் மாயமாய் வந்து மர்மமாய்ப்போகிறாய்
என்னைக் கடந்தபின்தான் அறிந்துகொண்டேன்
நீயும் எனக்கு எமன்தானென்று..

நீ என்னை வெறுக்கிறபோதெல்லாம்
"கறுப்பு யூலை" தான் ஞாபகம்
நான் தரும் காதல் கடிதங்களை கண்டு
"ஊரடங்குச்சட்டம்" போல மொளனித்திருப்பதேனடி
நீ என்ன இந்திய காடையர் படையா?
இல்லை ஸ்ரீலங்காவின் காமவெறிப் படையா?
ஈழத்தமிழரைப்போல் என்னைப் பாடாய்படுத்துவதற்கு..

கண்ணிவெடியில் அகப்பட்டவன் போல
உன்னை கண்ட பின் நானும் ஓர் ஊனம் தானடி
ஓர் பார்வையில் நீயும் உலகவல்லரசுகளும்ஒன்றுதானடி
அமேரிக்கன் போல் வெருட்டிப்பார்க்கிறாய்
சிங்களவன் போல் அடக்கியாளப்பார்க்கிறாய்
ஆனால் நானும் ஈழத்தமிழன் போல்
சளைக்காது நிற்கிறேனே ஏன், எதற்கு
கொஞ்சமேனும் யோசிச்சுப்பாரடி யென்மூதேவி

மூதேவி என திட்டியதற்கு கூட கோபமா?
என் செல்லமே, என்னைப் பிடிச்ச சனியனே
நான் என்ன செய்ய........
நீ போகும்போது தானே அழகாயிருக்கிறாய்.

சொற்பதங்கள்

ஆட்லறி,A.K.47 - போரில் பயன்படுத்தப்படும்ஆயுதங்கள்,

ஜெஜசுக்குறு - இலங்கையின் வடக்கே மேற்கொள்ளப்பட்ட
படைநடவடிக்கை.

கிபிர் - ஒரு வகை போர் விமானம்

கறுப்பு யூலை - இலங்கையில் தமிழர்கள்மீது சிங்களவர்களால்
மேற்கொள்ளப்பட் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை.

தேப்பன் - இலங்கையின் வட்டார வழக்குச்சொல்

தந்தை என பொருள் படும்.

Friday, February 10, 2006

"டும் டும் டும்" ஒப்பாரி

ஐயோ ஐயோ ஐயைய்யோ......
அநியாயத்துக்கு இப்பிடி பண்ணிட்டீயே
நேத்து வரைக்கும் நல்லாத்தானே இருந்த
பட்டாம் பூச்சி போல சுத்தித் திரிஞ்சியே
"பாவிப்பயலே" விட்டில் பூச்சி போலயாயிட்டியே
உனக்கு என்ன கேடு வந்ததுச்சின்னு
இப்பிடிப் பண்ணிட்டீயே "கேனப்பயலே"
உன் அழகுக்கு என்ன கேடு,அறிவுக்குத்தான் யாரீடு
ஊர் உலகம் ஆயிரம் சொல்லும்
"நாறப்பயலே" மதிமழுங்கி மரமாயிட்டீயே
ஐயோ ஐயோ ஐயைய்யோ............
கல்யாணம் கட்டிக்கிட்டீயே "களவானிப்பயலே"
கல்யாணம் கட்டிக்கிட்டியே
ஐயோ ஐயோ ஐயைய்யோ.......