Tuesday, January 09, 2007

காதலாம் காதல் கன்றாவிக் காதல்

நான் சிரிக்க நீ சிரித்து
நான் அழ நீ அழுது
நான் முறைக்க நீ முறைத்து
என் காதலியானாய்....
ஆனாலுமோர் சந்தேகம்
என் வீட்டு கண்ணாடியும்
இதைத்தானே செய்கிறது

போ என்றேன் போனாய்
வா என்றேன் வந்தாய்
கிட என்றேன் கிடந்தாய்
ஆனாலுமோர் சந்தேகம்
என் வீட்டு நாய்குட்டியும்
இதைத்தானே செய்கிறது

ஏன் eன்றபோது எல்லாமே
என்மீது கொண்ட காதலால் என்றாய்
என்காதலால் நீ "அஃறிணையாவதா"?
வேண்டவேவேண்டாம் போய்விடென்றேன்


போயேபோய் விட்டாய் நல்லவேளை
ஏனென கேட்கவில்லை கேட்டிருந்தால்
என்மீது கொண்ட காதலால் என்றிருப்பாய்.

Monday, August 14, 2006

கரியாகி கல்லாகி

தலைக்குமேலே கூவிச்சென்ற இயந்திரப்பறவை
போட்ட பல எச்சங்களினால்
கண்மூடி கண்திறப்பதுக்குள் கருகிச்சாம்பலாயிட்ட
எம் வளரும் பயிர்கள்
இனியென்ன செய்ய வழமைபோல்
கண்ணீர் விட்டு கதறியழுது மீண்டுமொரு தடவை
நெஞ்சைக் கல்லாக்கிட வேண்டியதுதான்
உலகே உற்றுப்பார் கரியாகி கல்லாகிப்போன
எம் உறவுகளையும் உணர்வுகளையும்

Sunday, July 30, 2006

ஆணின் பார்வையில் பெண்

உன்னை நிலவுக்கு ஒப்பாக்கினர்
நீ இரவில்மட்டும் தேவைப்படுவதனால்

உன்னை பேயென்று செப்பினர்
உன்னைகண்ட பின் அவர்த்ம்
தூக்கம்தொலைத்ததினால்

கற்புயெனும் போர்வைகொண்டு
உன்னை போத்தினர்
தாம் குளிர்காய்வதற்காய்

உந்நிலையில் தாயை மட்டும்
போற்றினர் தாம் செய்யும்
பிழைகள்தனை நீ பொறுப்பதனால்

Saturday, July 01, 2006

அறியா மனைவி




உனக்கு பசிவந்த போது என்னைத்தின்றாய்
எனக்கு பசிவந்த போது உன்னைத்தின்றேன்
நமக்கு பசிவந்த போது நம்மைத்தின்றோம்
இருந்தும் இதுவரை நானறியேன் யாருக்கு
பசிவந்ததென்று நீ அவளைதின்பதற்கு???

Monday, June 26, 2006

கவிஞன் வீட்டுக்கூரைகூட கவிபாடும்..

அந்த மழை தந்த குளிரில் மனையாளை
கட்டியணத்து கற்பனை கடலில் மூழ்கி
"அந்த நிலவில் போய் மாடமாளிகை கட்டி
என் தங்கத்தை பஞ்ஞணையில் சாய்த்து"
முடிப்பதற்குள் என்வாய் மூடி தன்வாய் மலர்ந்தாள்
"அந்த மாடமாளிகையில் கூரைகள் ஏதுமில்லாது
வானத்தையே கூரயாக்கிடுவார் என் அத்தான்"
அருமை,அருமை நாம் கொண்ட காதல் மழையில்
என் மனையாள் கூட கவிஞையாகிவிட்டாள்
என்றெண்ணி முகம் நிமிர்ந்து பார்க்கயில்
பெரியதொரு மழைத்துளி தங்குதடையேதுமின்றி
கூரை வழியே என்நெத்திப்பொட்டில் பட்டுத்தெறித்தது

Thursday, May 11, 2006

"அம்மா"



மெழுகுவர்த்திபோல் உனக்காக உருகுமோர் சீவன்
சடமான பின்னும் உயிர்கொடுக்க துடிக்குமோர் உறவு
தன் குருதியை உணவாக்கி ஊட்டுமோர் உத்தமி
உன் நிழலுக்கு உருவம் கொடுக்குமோர் உடல்
உனக்கேயுனக்காய் மட்டும் பூவுலகில் வாழுமோர் உயிர்
தமிழகராதியின் அன்பிற்க்கு பொருளாகிய "அம்மா"

என் வலிதான் பெரிது

உலகம் சொல்கிறது பிரசவ வலி பெரிதென்று
மருத்துவம் சொல்கிறது பெண்ணின் மறுபிறப்பென்று
"தாயே" நான் சொல்லுகின்றேன் இவ்வுலகில்
அதை விட பெரியதோர் வலியொன்றுண்டு
நான் பிறக்கும் போது நீ கொண்ட வலியை
நான் பன்மடங்காகவன்றோ உணர்கின்றேன்
நமக்குள் பிரிவு எனும் பதம் வரும்போது......