Monday, August 14, 2006

கரியாகி கல்லாகி

தலைக்குமேலே கூவிச்சென்ற இயந்திரப்பறவை
போட்ட பல எச்சங்களினால்
கண்மூடி கண்திறப்பதுக்குள் கருகிச்சாம்பலாயிட்ட
எம் வளரும் பயிர்கள்
இனியென்ன செய்ய வழமைபோல்
கண்ணீர் விட்டு கதறியழுது மீண்டுமொரு தடவை
நெஞ்சைக் கல்லாக்கிட வேண்டியதுதான்
உலகே உற்றுப்பார் கரியாகி கல்லாகிப்போன
எம் உறவுகளையும் உணர்வுகளையும்

Sunday, July 30, 2006

ஆணின் பார்வையில் பெண்

உன்னை நிலவுக்கு ஒப்பாக்கினர்
நீ இரவில்மட்டும் தேவைப்படுவதனால்

உன்னை பேயென்று செப்பினர்
உன்னைகண்ட பின் அவர்த்ம்
தூக்கம்தொலைத்ததினால்

கற்புயெனும் போர்வைகொண்டு
உன்னை போத்தினர்
தாம் குளிர்காய்வதற்காய்

உந்நிலையில் தாயை மட்டும்
போற்றினர் தாம் செய்யும்
பிழைகள்தனை நீ பொறுப்பதனால்

Saturday, July 01, 2006

அறியா மனைவி




உனக்கு பசிவந்த போது என்னைத்தின்றாய்
எனக்கு பசிவந்த போது உன்னைத்தின்றேன்
நமக்கு பசிவந்த போது நம்மைத்தின்றோம்
இருந்தும் இதுவரை நானறியேன் யாருக்கு
பசிவந்ததென்று நீ அவளைதின்பதற்கு???

Monday, June 26, 2006

கவிஞன் வீட்டுக்கூரைகூட கவிபாடும்..

அந்த மழை தந்த குளிரில் மனையாளை
கட்டியணத்து கற்பனை கடலில் மூழ்கி
"அந்த நிலவில் போய் மாடமாளிகை கட்டி
என் தங்கத்தை பஞ்ஞணையில் சாய்த்து"
முடிப்பதற்குள் என்வாய் மூடி தன்வாய் மலர்ந்தாள்
"அந்த மாடமாளிகையில் கூரைகள் ஏதுமில்லாது
வானத்தையே கூரயாக்கிடுவார் என் அத்தான்"
அருமை,அருமை நாம் கொண்ட காதல் மழையில்
என் மனையாள் கூட கவிஞையாகிவிட்டாள்
என்றெண்ணி முகம் நிமிர்ந்து பார்க்கயில்
பெரியதொரு மழைத்துளி தங்குதடையேதுமின்றி
கூரை வழியே என்நெத்திப்பொட்டில் பட்டுத்தெறித்தது

Thursday, May 11, 2006

"அம்மா"



மெழுகுவர்த்திபோல் உனக்காக உருகுமோர் சீவன்
சடமான பின்னும் உயிர்கொடுக்க துடிக்குமோர் உறவு
தன் குருதியை உணவாக்கி ஊட்டுமோர் உத்தமி
உன் நிழலுக்கு உருவம் கொடுக்குமோர் உடல்
உனக்கேயுனக்காய் மட்டும் பூவுலகில் வாழுமோர் உயிர்
தமிழகராதியின் அன்பிற்க்கு பொருளாகிய "அம்மா"

என் வலிதான் பெரிது

உலகம் சொல்கிறது பிரசவ வலி பெரிதென்று
மருத்துவம் சொல்கிறது பெண்ணின் மறுபிறப்பென்று
"தாயே" நான் சொல்லுகின்றேன் இவ்வுலகில்
அதை விட பெரியதோர் வலியொன்றுண்டு
நான் பிறக்கும் போது நீ கொண்ட வலியை
நான் பன்மடங்காகவன்றோ உணர்கின்றேன்
நமக்குள் பிரிவு எனும் பதம் வரும்போது......

Tuesday, April 11, 2006

நானறியலையே

கால் கடுக்க காததூரம் நீ கல்லூரிக்குப் போகையிலே
என்னையும் நிழலாக்கிவிட்ட கள்ளியே
ஏனே அப்போது வரை நானறியலையே
"செருப்பு" உன் காலுக்கு மட்டுமல்ல
என் கன்னத்துக்கும் தானெண்டு

நீ அடிக்கடி திரும்பிப் பார்க்கையலெ
என் முடியை கதானாயகனாட்டம் கோதிவிடுகையிலே
ஏனோ அப்போது வரை நானறியலையே
உன் அண்ணன் தான் என் வில்லனெண்டு

ஆவணி மாசத்து என் தோழனின் மணப்பந்தலிலே
மணப்பெண்ணாக நீ வீற்றிருக்கையிலே
ஏனோ அப்போது வரை நானறியலையே
மாலையிட்ட அவன்தானுந்தன் மச்சானெண்டு.

Tuesday, March 28, 2006

என்னமோ நடக்குது.. மர்மாய் இருக்குது..

பார்த்து என்னமோ பத்து நாள்தான்
அந்த பக்கத்து வீட்டுப் பைங்கிளியை
கஞ்சப்பயலொருவன் செய்த குறுக்கிலுமாய்
வள்ளல்பயலொருவன் செய்த நெஞ்சிலுமாய்
இருந்தென்னை காற்றுப்போன பந்தாக்கிவிட்டாள்

இந்நேரம் அவள் பள்ளியெழுவாளே, பல்துலக்குவாளே,
குளிக்கப்போறாளே இப்போ "சோப்பு"போடுவாளோ
ச்சீ ச்சீ வெட்கத்தை விட்டுச்சொன்னால் தானென்ன
இப்போதெல்லாம் என்மனம் குப்பைக்கூடைகள்தாம்

அவள் தந்தை தாய் அறியுமோ ?
ஆனாலும் யாமறியும் அவள்
என்னெல்லாம் படிக்கிறாள் எங்குகெல்லாம்படிக்கிறாள்
எப்படி யெல்லாம் படிக்கிறாளெண்டு

எனக்கு இப்போது என்
நண்பர்களெல்லாம் எதிரிகளாய்,வானரக்கூட்டங்களாய்
அவள் பத்துவயதுதம்பி மட்டும் ஆருயிர்தோழனாய்

அம்மாகூட மெய்சிலிர்த்துதான் போனாள்
"என் பையனுக்கு பொறுப்பு வந்திட்டுது"
காவாலிகளோடு சேர்ந்து ஊரச்சுத்தாம
வீட்டோட இருக்கிறானேயென்று

மனுசனாடா நீ? நேத்து வந்தவளுக்காக நம்மளையெல்லாம்...
முன்னால் நண்பன் திட்டுவதுககூட விளங்கவில்லை
நான்தான் சுவத்தில் காதைவைத்து அவள் தன்னடுப்படியில்
முணுமுணுக்கும் பாட்டை இரசித்துக்கொண்டு இருக்கின்றேனே.

Tuesday, February 28, 2006

ஈழத்தமிழன் காதல்கொண்டால்..


உன் கடைக்கண் பட்டால்
என்நெஞ்சில் ஆயிரம் "ஆட்லறி" வெடிக்கிறதே
அதுவே உன் தேப்பன் பார்த்திட்டால்
"ஜெஜசுக்குறு" ஒன்று நடக்கிறதே
நீ என்னை திட்டும் ஒவ்வொரு சொல்கூட
"A.K.47"தோட்டாக்கள் போலதான் துளையிடுதே
"கிபிர்"போல் மாயமாய் வந்து மர்மமாய்ப்போகிறாய்
என்னைக் கடந்தபின்தான் அறிந்துகொண்டேன்
நீயும் எனக்கு எமன்தானென்று..

நீ என்னை வெறுக்கிறபோதெல்லாம்
"கறுப்பு யூலை" தான் ஞாபகம்
நான் தரும் காதல் கடிதங்களை கண்டு
"ஊரடங்குச்சட்டம்" போல மொளனித்திருப்பதேனடி
நீ என்ன இந்திய காடையர் படையா?
இல்லை ஸ்ரீலங்காவின் காமவெறிப் படையா?
ஈழத்தமிழரைப்போல் என்னைப் பாடாய்படுத்துவதற்கு..

கண்ணிவெடியில் அகப்பட்டவன் போல
உன்னை கண்ட பின் நானும் ஓர் ஊனம் தானடி
ஓர் பார்வையில் நீயும் உலகவல்லரசுகளும்ஒன்றுதானடி
அமேரிக்கன் போல் வெருட்டிப்பார்க்கிறாய்
சிங்களவன் போல் அடக்கியாளப்பார்க்கிறாய்
ஆனால் நானும் ஈழத்தமிழன் போல்
சளைக்காது நிற்கிறேனே ஏன், எதற்கு
கொஞ்சமேனும் யோசிச்சுப்பாரடி யென்மூதேவி

மூதேவி என திட்டியதற்கு கூட கோபமா?
என் செல்லமே, என்னைப் பிடிச்ச சனியனே
நான் என்ன செய்ய........
நீ போகும்போது தானே அழகாயிருக்கிறாய்.

சொற்பதங்கள்

ஆட்லறி,A.K.47 - போரில் பயன்படுத்தப்படும்ஆயுதங்கள்,

ஜெஜசுக்குறு - இலங்கையின் வடக்கே மேற்கொள்ளப்பட்ட
படைநடவடிக்கை.

கிபிர் - ஒரு வகை போர் விமானம்

கறுப்பு யூலை - இலங்கையில் தமிழர்கள்மீது சிங்களவர்களால்
மேற்கொள்ளப்பட் இனச்சுத்திகரிப்பு நடவடிக்கை.

தேப்பன் - இலங்கையின் வட்டார வழக்குச்சொல்

தந்தை என பொருள் படும்.

Friday, February 10, 2006

"டும் டும் டும்" ஒப்பாரி

ஐயோ ஐயோ ஐயைய்யோ......
அநியாயத்துக்கு இப்பிடி பண்ணிட்டீயே
நேத்து வரைக்கும் நல்லாத்தானே இருந்த
பட்டாம் பூச்சி போல சுத்தித் திரிஞ்சியே
"பாவிப்பயலே" விட்டில் பூச்சி போலயாயிட்டியே
உனக்கு என்ன கேடு வந்ததுச்சின்னு
இப்பிடிப் பண்ணிட்டீயே "கேனப்பயலே"
உன் அழகுக்கு என்ன கேடு,அறிவுக்குத்தான் யாரீடு
ஊர் உலகம் ஆயிரம் சொல்லும்
"நாறப்பயலே" மதிமழுங்கி மரமாயிட்டீயே
ஐயோ ஐயோ ஐயைய்யோ............
கல்யாணம் கட்டிக்கிட்டீயே "களவானிப்பயலே"
கல்யாணம் கட்டிக்கிட்டியே
ஐயோ ஐயோ ஐயைய்யோ.......

Wednesday, February 08, 2006

இயற்கையுடன் சில கணம்

அன்று !
பாலர் பருவத்தில் பேருந்து பயணம்
எனக்கு கையசைத்து பின்னே மறைந்தவை
பச்சை மரங்கள் பசுமையுடன்...
இன்று !
முதுமையிலும் பேருந்துப் பயணம்
என்னை வளியனிப்பி பின்னே சென்றவை
சிவப்பு மாடிகள் எரிச்சலுடன்...

Monday, January 23, 2006

தாயின் நிலை

உயிரில் பாதி தந்து என்னை உருவாக்கியவள்
உலகில் பாதியை எனக்கு உணர்த்தியவள்
அன்பிற்கோர் எல்லையில்லை என்று புகட்டியவள்
பாசத்திற்கார் வேசமில்லை என்றுசொல்லியவள்
பாலர் பருவத்தில் அம்மாவாக இருந்தவள்
இருபதாவது வயதினில் சகோதரியாக இருந்தாள்
என் முப்பது தனில் என்சொல் கேட்கும் மகளாகிவிட்டாள்
நான் நாற்பதைக் கடந்தபோது "அந்தோ பரிதாபம்"
என் குடும்பத்திற்கு வேண்டப்படாத ஒருத்தியாகிவிட்டாள்..

நினைவுப்பொருட்கள்

நீ பிரிந்த போது
உன் நினைவு பொருட்களை மட்டும்
ஏன் விட்டுச்சென்றாய்
நீ என்னுள் காயமாய் இருக்கின்றாய்
காலமெனும் மருந்து கொண்டு
அக்காயத்தை ஆற்றவே முற்படுகிறேன்
ஆனால் உன் நினைவுப்பொருட்களோ
காயத்தை ஆற்ற விடாதா
"ஈ" க்களாக இருக்கின்றனவே....

Tuesday, January 10, 2006

கனவு மெய்பட வேண்டும்

நீ கொண்ட வெட்கச்சிவப்பு
என் தோலின் நிறமாக வேண்டும்

நீ கொண்ட வெண்சிருப்பு
என் மனதின் தூய்மையாக வேண்டும்

நீ கொண்ட கருங்கூந்தல்
என் கனவின் இருளாக வேண்டும்

நீ கொண்ட கண்ணின்கருமணி
என் முகம் காட்டும் தளவாடியாக் வேண்டும்

நீ கொண்ட நாற்குணங்களும்
என் தங்கைக்கும் கிடைத்தருள வேண்டும்

நீ கொண்ட அன்பு மழையில்
என் தந்தையும்தாயும் மணற்சிற்பமாக வேண்டும்

நீ கொண்ட காதல்
என் உடலின் உயிராக வேண்டும்

நீ கொண்ட உறவு
என் பிரமச்சரியத்தின் முடிவாக வேண்டும்

நீ கொண்ட பிரிவு
என் வாழ்வின் முடிவாக வேண்டும்

பூட்டு


கடினப்பட்டு கண்விழித்தது
உன்னை நம்பியே
எனது அன்பிற்கும்,திறமைக்கும்கிடைத்தவை
உன்னை நம்பியே
நாளை என்னை சொந்தம் கொண்டாட வருவதும்
உன்னை நம்பியே
நடுத்தெருவில் நாதியற்றவனாய் விடமாட்டாய் என்பதும்
உன்னை நம்பியே
போய்வருகிறேன் போய்வருகிறேன்
என்னை காப்பாற்றுவாயோ?, களுத்தறுப்பாயோ?
உன்னை நம்பியே போய்வருகிறேன்...

இலங்கை தனில் இருபதைக்கடந்தால்

நாலாம்பிறை கண்டால் நாயலைச்சல் என்றது ஐதீகம்
இருபதைக் கடந்தால் அவமானம் என்றது அனுபவம்
கறுப்புத் தடித்த அட்டையிலே காகிதப்பொட்டலம்
பேருக்குத்தான் அது சான்றிதழ்
"அனுபவம் உண்டா" என்ற் குரலுக்கு முன்னே குப்பைகளாய்
"எவ்வளவு வைப்பாய்" என்ற இலஞ்சத்துக்கு முன்னே கசக்கி போட்ட காகிதங்களாய்
ஆணவம் கொண்ட முதலாளி ஒருவன்!

"பணமிருந்தால் உள்ளேயெடு இல்லையேல் காய்வெட்டிவிடு என்றான்"
கலைமகளையே அறிந்திராத என்னோருவன்!
"அனுபவமே இல்லாத உன்னைவைத்து அழிந்து போவதா என்றான்"
தலைப்பிரசவத்திற்கே அனுபவம் கேட்டால்

அனுபவம் கிடைப்பது எப்போது?
பிள்ளை பெறுவதுதான் எப்போது?
அனுபவம்தான் முதன்மையென்றால்

படிப்பு எதற்கு பட்டம்தான் எதற்கு
பணம்தான் முதன்மையென்றால்
பாடசாலை எதற்கு பல்கலைக்கழகம்தான் எதற்கு
மெல்லவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தவிக்கிறது எம்வீடு

வெட்டிப்பசங்கள் என தூற்றுகிறது எம்ஊரு
அழுத்திய உடைகளுடன் ஏறுகிறோம் அலுவலகப்படிகளில்
அலுத்துப்போன உணர்வுகளுடன் இறங்குகிறோம் அதேபடிகளில்..

Sunday, January 08, 2006

நிலா ஒளி

பாரதிக்கோ கள்ளின் மயக்க ஒளி
தலைவனுக்கோ தலைவியின் வெட்க ஒளி
ஆம்ஸ்ரோங்கிற்கோ இலட்சிய ஒளி
விஞ்ஞானத்துக்கோ கடன் ஒளி
எனக்கோ கருமையின் ஒளி
குருடனின் நிலை அதுதனே..

செல்லிடப்பேசி




கொடுத்துவைத்தவன்யா நீ !!
நீ செல்லாத இடமேது
நீ தவளாத கையேது
நீ சிணுங்காத நேரமேது
நீ கேட்காத இரகசியம்தானேது
அன்று தனது காலடிகளால் உலகையாண்டவன்

இன்று உன் வடிவில் உலகையாழ்கிறானோ?

தளவாடி

எந்த அஃறிணைக்கும் இல்லாத சிறப்பு இதற்கு
ஏனெனில் இதைத்தானே அதிகநேரம்
அலுப்புச் சலிப்பில்லாமல் கவனிக்கிறோம்.